அரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் சாலை ஓரத்தில் கிடந்த சூட்கேஸ் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த அந்த சூட்கேஸைப் பார்த்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை சூட்கேசில் அடைத்து இங்கு வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த பெண் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
அந்தப் பெண்ணின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
