ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரஷிய அதிபரின் இல்லம் குறிவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளே சரியான வழிமுறை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ரஷியாவின் நோவ்கோரோட் பகுதியில் உள்ள அதிபரின் இல்லத்தை நோக்கி உக்ரைன் 91 ட்ரோன்களை ஏவியதாகவும், அவை ரஷிய வான் பாதுகாப்புப் படையினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை உக்ரைன் மறுத்துள்ளது. இத்தகைய சூழலில், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலைத் தணிக்க முன்னெடுக்கப்படும் அமைதி முயற்சிகளுக்குப் பாதகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் தவிர்க்குமாறு பிரதமர் மோடி அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.