அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ இல்லத்தில் நேதன்யாகுவை சந்தித்த டிரம்ப், அவரை “போர்க்கால பிரதமர்” என்று வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.
மேலும் நேதன்யாகுவின் தலைமையைப் பாராட்டிய டிரம்ப், “நேதன்யாகுவைத் தவிர வேறு யாராவது இந்த நேரத்தில் இஸ்ரேலின் பிரதமராக இருந்திருந்தால், இந்நேரம் இஸ்ரேல் என்ற நாடே அழிந்திருக்கும்” என்று ஒரு அதிரடியான கருத்தை முன்வைத்தார்.
இஸ்ரேல் மிகக் கடினமான மற்றும் அபாயகரமான காலகட்டத்தைக் கடந்து வருவதாகவும், அத்தகைய இக்கட்டான சூழலில் நேதன்யாகுவின் அனுபவம் வாய்ந்த தலைமை அந்த நாட்டைப் பாதுகாத்துள்ளதாகவும் டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது காசா போர் மற்றும் ஹமாஸ் அமைப்பினருடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததோடு, அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
அதேபோல், ஈரானின் அணுஆயுத முயற்சி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தனது முழு ஆதரவையும் டிரம்ப் வெளிப்படுத்தினார். நேதன்யாகுவும் டிரம்பின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இஸ்ரேலின் மிக உயரிய கௌரவமான ‘இஸ்ரேல் விருதை’ அவருக்கு வழங்கினார். இந்தச் சந்திப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
