மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில், தொட்டிலில் இருந்த மூன்று மாத பெண் குழந்தையை, குடிபோதையில் இருந்த உறவினரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரேனா மாவட்டத்தின் ஸ்டேஷன் ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு கூட்டுக் குடும்பத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று மதியம் சுமார் 12 மணியளவில், வீட்டின் முற்றத்தில் இருந்த கட்டிலில் 3 மாத பெண் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.
அப்போது, அதே வீட்டில் வசிக்கும் குழந்தையின் உறவினரான 30 வயது நபர், மது போதையில் குழந்தையைத் தூக்க முயன்றுள்ளார். அவர் மது அருந்தியிருந்ததால், குழந்தையின் தாயும் பாட்டியும் குழந்தையைத் தூக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவர்களது எதிர்ப்பை மீறி, குழந்தைக்கு உணவு ஊட்டுவதாகக் கூறி அந்த நபர் குழந்தையை அருகில் இருந்த தனி அறைக்குத் தூக்கிச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அறையிலிருந்து குழந்தை அலறும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த நபர் குழந்தைக்குக் கொடுமை இழைத்தது தெரியவந்தது. குடும்பத்தினர் அவரைப் பிடிக்க முயன்றபோது, அவர்களைத் தாக்கிவிட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், படுகாயமடைந்த குழந்தையை மீட்டு உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர பிரதாப் சிங் தலைமையிலான தனிப்படை போலீஸார், தலைமறைவாக இருந்த அந்த நபரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். கைதான நபர் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதக் குழந்தைக்கு நேர்ந்த இந்த அவலம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
