பெங்களூரு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த பெருநகரத்தில், உயர்தர உணவு கலாச்சாரம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒன்றாகவே மாறிவிட்டது. பன்னாட்டு வணிகப் பிரமுகர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிட விரும்புபவர்கள் என ஏராளமானோர் மூன்று நட்சத்திரம் மற்றும் ஐந்து நட்சத்திர உணவகங்களை நோக்கித்தான் செல்கிறார்கள்.
ஆனால், நாம் அதிக பணம் கொடுத்து வாங்கும் உணவு எவ்வளவு பாதுகாப்பானது என்ற கேள்வியை எழுப்பும் வகையில், பெங்களூரில் உள்ள முன்னணி நட்சத்திர உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உணவுப் பாதுகாப்புத் துறையின் சிறப்புப் படைகள் நடத்திய இந்த திடீர் ஆய்வின் போது, பல ஆடம்பர உணவகங்களின் சமையலறைகளில் கெட்டுப்போன காய்கறிகள், பூஞ்சை பிடித்த உணவுப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டுத் தேதி முடிவடைந்த பல காலாவதியான பொருட்கள் சமையலுக்காகப் வைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வெளிப்புறத் தோற்றத்திலும், உணவகத்தின் அலங்காரத்திலும் அத்தனை பிரமாண்டத்தைக் காட்டும் இந்த உணவகங்கள், வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான சுகாதார விஷயத்தில் அடியோடு அலட்சியமாக நடந்து கொண்டிருப்பது அதிகாரிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமையலறைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தரமற்ற உணவுப் பொருட்களையும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கை சாயங்களையும் அதிகாரிகள் உடனடியாக அழித்தனர். மேலும், உணவக விதிகளையும் சுகாதார நெறிமுறைகளையும் மீறிய உணவக உரிமையாளர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை நோட்டீஸ்களை வழங்கிய தோடு, உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வக சோதனைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
நட்சத்திர அந்தஸ்து கொண்ட பெரிய உணவகங்கள் கூட லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, நுகர்வோரின் உயிருடன் விளையாடும் போக்கை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. பெருநகரங்களில் வாழும் மக்கள் தங்களின் பிஸியான வாழ்க்கைச் சூழலில், அதிகக் கட்டணம் செலுத்தி உணவருந்தும் போது தங்களுக்குத் தரமான உணவு கிடைக்கும் என்றே நம்புகிறார்கள்.
அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது உணவகங்களின் கடமை மட்டுமல்ல, அதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் பொறுப்பும் கூட. இதுபோன்ற திடீர் சோதனைகளைத் தொடர்ந்து நடத்துவதும், தவறு செய்யும் பெரிய உணவகங்கள் மீதும் தயவுதாட்சணியமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதும் மட்டுமே பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் முழுமையாக உறுதிசெய்யும்.
