‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த தான் மத்தியஸ்தம் செய்ததாக சீனா உரிமை கொண்டாடியது. இந்த கூற்றை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தை மூலமாகவே எட்டப்பட்டதாக இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு நாட்டின் தலையீடும் இல்லை என்பதை வெளியுறவு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தைத் தணிக்க பெய்ஜிங் முக்கியப் பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் இருதரப்பு ரீதியிலேயே எடுக்கப்படுவதாகவும், இதில் மற்ற நாடுகளின் தலையீட்டிற்கு இடமில்லை என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்தையும் இந்தியா ஏற்கனவே நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்கவே மே 10 அன்று போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
