ஐபிஎல் 2026 தொடரின் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அபார சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். நடப்புத் தொடரின் முதல் சதத்தைப் பதிவு செய்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

போட்டி முடிந்த பிறகு வர்ணனையாளர் ரவி சாஸ்திரிக்கு அளித்த பேட்டியில் சஞ்சு சாம்சன் மிகவும் நெகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் பேசினார். அவர் கூறுகையில், “சார், நீங்கள் எனக்கு மிகவும் ராசியானவர் என்று நினைக்கிறேன். நீங்கள் நேர்காணல் செய்யும் போதெல்லாம் நான் சிறப்பாக விளையாடுகிறேன். எனவே, தயவுசெய்து ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் என்னை வந்து சந்தியுங்கள்” என்று சிரித்துக் கொண்டே வேண்டுகோள் விடுத்தார்.

தனது ஆட்டம் குறித்து சஞ்சு மேலும் கூறுகையில், “எவ்வளவு அனுபவம் இருந்தாலும், ஓரிரு போட்டிகளில் சோபிக்கத் தவறினால் மனதில் தேவையற்ற சந்தேகங்கள் எழும். அந்தச் சூழலில் நான் எனது அடிப்படை ஆட்டத்திற்குத் திரும்பினேன். என் மீதும், எனது பேட்டிங் முறையின் மீதும் முழு நம்பிக்கை வைத்தேன். அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகச் சிறப்பாக இருந்தது, இதற்காகப் பராமரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது குறித்துப் பேசிய சஞ்சு, “ஆயுஷ் ஒரு திறமையான இளம் வீரர். அவருடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. விக்கெட்டுகளை இழக்காமல் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் திட்டமாக இருந்தது” என்றார்.

மேலும் சென்னை நிர்ணயித்த 212 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 66 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்களான லோகேஷ் ராகுல் மற்றும் பதும் நிசங்கா அதிரடியாகத் தொடங்கினாலும், கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோரின் பந்துவீச்சில் டெல்லி விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.