நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சர்ஃபராஸ் கான் எடுத்த பிரமிக்கத்தக்க கேட்ச், சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு போட்டியின் திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 213 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், அக்‌ஷர் படேல் களமிறங்கினார். குர்ஜப்னீத் சிங் வீசிய ‘ஷார்ட் ஆஃப் லெந்த்’ பந்தை அக்‌ஷர் படேல் மிக பலமாக ‘கட்’ (Cut) செய்தார். பந்து சென்ற வேகத்தைப் பார்த்தபோது அது நிச்சயம் எல்லைக்கோட்டைத் தாண்டும் என்றே அனைவரும் கருதினர்.

ஆனால், ‘பேக்வேர்ட் பாயிண்ட்’ திசையில் நின்றிருந்த சர்ஃபராஸ் கான், மின்னல் வேகத்தில் தனது வலதுபுறம் காற்றில் பாய்ந்து (Dive) அந்தப் பந்தை ஒற்றை கையால் பிடிப்பது போல் கவ்வி, பின்னர் இரு கைகளாலும் பிடித்து நிலைநிறுத்தினார். பந்து வந்த வேகத்தையும், சர்ஃபராஸ் காற்றில் பறந்த விதத்தையும் பார்த்த ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் வியப்பில் உறைந்தனர். சிறந்த பீல்டரான கிளென் பிலிப்ஸே இந்த கேட்சைப் பார்த்தால் மிரண்டு போவார் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அக்‌ஷர் படேல் போன்ற அதிரடி வீரர் நிலைத்து நின்றால் ஆட்டம் டெல்லி பக்கம் திரும்ப வாய்ப்பிருந்தது. ஆனால் சர்ஃபராஸின் இந்த ‘சூப்பர் மேன்’ கேட்ச் மூலம் அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டது. பேட்டிங்கில் மட்டுமல்லாமல், களத்தடுப்பிலும் தான் எவ்வளவு சுறுசுறுப்பானவர் என்பதை சர்ஃபராஸ் கான் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். அவரது இந்த சிறப்பான கேட்ச் சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.