ஐபிஎல் 2026 தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. இப்போட்டியின் போது ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் விதிமுறைகளை மீறி செல்போன் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியின் 11-வது ஓவரின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டக்-அவுட்டில் (Dugout) அமர்ந்திருந்த மேலாளர் ரோமி பிந்தர், தனது செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அருகில் அமர்ந்து அவர் செல்போன் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.
ஐபிஎல் ஊழல் தடுப்பு (Anti-Corruption) விதிமுறைகளின்படி, போட்டி நடைபெறும் போது வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கியிருக்கும் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி, பிசிசிஐ-யின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில் இது போன்ற செயல்களை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. ஊழல் தடுப்பு அதிகாரிகள் எங்கே போய்க் கொண்டிருந்தார்கள்? பாதுகாப்பு வளையத்திற்குள் இது எப்படி அனுமதிக்கப்பட்டது? எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பிசிசிஐ-யின் PMOA (Players and Match Officials Area) நெறிமுறைகளின்படி, அணி மேலாளர் செல்போனை வைத்திருக்க அனுமதி உண்டு, ஆனால் அதை டிரெஸ்ஸிங் ரூமுக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மைதானத்தின் எல்லைக்கு அருகிலுள்ள டக்-அவுட் பகுதியில் செல்போன் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழையும் போதே தங்களது செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சுகளை பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
— Cricket Iconic (@ankanghosh335) April 11, 2026
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், ஐபிஎல் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் போட்டி நடுவர் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. விதிமீறல் உறுதியானால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அல்லது அதன் மேலாளர் மீது அபராதம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
தற்போது வரை இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகமோ அல்லது ஐபிஎல் நிர்வாகமோ அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. இருப்பினும், ஐபிஎல் ஆளுமன்றக் குழுவின முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
