பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் விளையாடி வரும் இலங்கை வீரர் குசல் மெண்டிஸ், ஐபிஎல் தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு தெரிவித்ததுடன், அதுகுறித்த விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெஷாவர் சால்மி மற்றும் லாகூர் கலாண்டர்ஸ் அணிகள் மோதின. இதில் பெஷாவர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்ற குசல் மெண்டிஸிடம், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் ஒரு சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பினார்.
அதில் “கடந்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களைக் கூறி நீங்கள் பி.எஸ்.எல் தொடரிலிருந்து விலகி, ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினீர்கள். ஆனால் இந்த ஆண்டு பி.எஸ்.எல் உங்களை மரியாதையுடன் வரவேற்றுள்ளது. கடந்த ஆண்டு பி.எஸ்.எல் தொடரிலிருந்து விலகியதற்காக நீங்கள் இப்போது வருத்தப்படுகிறீர்களா?
இந்தக் கேள்வியால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பெஷாவர் அணியின் மேலாளர், “பி.எஸ்.எல் 2026 தொடர்பான கேள்விகளை மட்டுமே கேளுங்கள்” என்று செய்தியாளரை தடுத்தார். குசல் மெண்டிஸும் அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் மௌனம் காத்தார்.
கடந்த 2025 ஐபிஎல் தொடரில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லருக்குப் பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் மெண்டிஸ் சேர்க்கப்பட்டார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மட்டுமே அவர் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்தப் போட்டியில் 20 ரன்கள் எடுத்த மெண்டிஸ், சில முக்கியமான கேட்சுகளை தவறவிட்டது விமர்சனத்திற்குள்ளானது. அந்தப் போட்டியில் குஜராத் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
