சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டோம். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தங்கும் இடங்கள், உணவுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேரிடர் கால கருவிகள், பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பேரிடர் மீட்பு மையங்களை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருக்க வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் கடமை அரசுக்கு உள்ளது. தென்மேற்கு பருவ மழையின் போது திடீர் வெள்ளம் நிலச்சரிவை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக கன மழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பேரிடர் காலங்களில் சமூக வலைதளங்களில் வரும் புகார்கள் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீர் மின்வெட்டு பராமரிப்பு மின்வெட்டு குறித்து நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்ப வேண்டும். எப்போது மீண்டும் மின்சாரம் வரும் என்ற தகவலையும் சேர்த்து குறுஞ்செய்தி அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 12 குறுவை சாகுபடிக்கு அணையை திறக்க போதுமான அளவு தண்ணீர் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கு முன்பே கடைமடை கால்வாய்களை தூர்வார முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.