தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவையில் நடைபெற்ற மாநில மையக்குழு கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், எல். முருகன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், சனாதன பண்பாட்டிற்கு தமிழகத்தின் பங்களிப்பு ஈடு இணையற்றது என்றும், சுவாமி விவேகானந்தர் முதல் பிரதமர் மோடி வரை தமிழின் பெருமையை உலகறியச் செய்து வருவதாகவும் பாராட்டினார்.
அதேவேளையில், ஆளும் திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தின் ஆன்மிக மரபுகளையும், இந்து நம்பிக்கைகளையும் திமுக அரசு தொடர்ந்து அவமதித்து வருவதாகக் குற்றம் சாட்டிய நிதின் நபின், ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் திமுக மூழ்கியுள்ளதாகக் கூறினார்.
ராமசேதுவை எதிர்த்த காங்கிரஸ் வீழ்ந்ததைப் போல, சனாதனத்தை இகழும் திமுகவின் அரசியல் வீழ்ச்சியும் கோயம்புத்தூர் மண்ணிலிருந்தே தொடங்கும் என்றும், மக்கள் விரைவில் திமுகவிற்குப் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
