நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கக்கன் நகரைச் சேர்ந்த செல்லப்பாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இளைய மகன் மகாராஜ் (வயது 30), தொடர்ந்து மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி பலருடன் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அவரது பழக்கத்தால் தாம்பத்ய வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார். அண்மையில், மதுபோதையில் இருந்த மகாராஜ், அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த சிறுவனை அடித்ததால் அந்த சிறுவனுக்கு காது அருகே காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் கோபத்தில் அந்த வீட்டிற்கு வந்து முறையிட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மகாராஜின் அண்ணன் இசக்கி முத்து தம்பியை கண்டித்தார். ஆனால் மகாராஜ் எதையும் கண்டு கொள்ளாததால் கோபத்தில் செல்லப்பா வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து மகனின் தலையில் ஓங்கி தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மகாராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அண்ணன் இசக்கி முத்துவும் காயமடைந்துள்ளார். தந்தை மற்றும் அண்ணன் இருவரும் சிறிது நேரம் பிறகு அமைதியாக வீட்டிற்குள் சென்று அமர்ந்திருந்தனர்.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்த மகாராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, செல்லப்பா, இசக்கி முத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
