தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க இன்னும் 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி நேற்று அதிரடியாக விஜய்க்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள்.
இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ள நிலையில், திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் ஆளுநர் காலதாமதம் செய்வது முறையல்ல என்று கண்டனம் தெரிவித்தார். சட்டப்பேரவையிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் பாஜக கடும் ஆத்திரத்தில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே விஜய்க்குப் பல்வேறு இடையூறுகளை அவர்கள் கொடுத்து வருவதாகவும் திருமாவளவன் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
