ரயில் பயணத்தின் போது குளிரூட்டப்பட்ட பெட்டியில் (AC Coach) பயணம் செய்த பயணி ஒருவர், ஆழ்ந்த தூக்கத்தின் காரணமாகத் தான் இறங்க வேண்டிய நிலையத்தைத் தவறவிட்டார். அவர் கண்விழித்துப் பார்த்தபோது ரயில் மெதுவாக நடைமேடையை விட்டு நகரத் தொடங்கியிருந்தது. பதற்றமடைந்த அவர், அங்கிருந்த பயணச்சீட்டு பரிசோதகரிடம் (TTE) அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து (Chain Pulling) ரயிலை நிறுத்துமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், முறையான காரணமின்றி ரயிலை நிறுத்த முடியாது என்றும், அப்படிச் செய்தால் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறி பரிசோதகர் மறுத்துவிட்டார்.
தன்னால் ரயிலை நிறுத்த முடியாது என்று பரிசோதகர் கையை விரித்த நிலையில், அங்கிருந்த சக பெண் பயணி ஒருவர் அந்த நபருக்கு தைரியம் கூறியுள்ளார். ரயில் மெதுவாகவே செல்வதால் பயப்படாமல் கீழே இறங்குமாறு அவர் கூற, வேறு வழியின்றி அந்த நபர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார். அவர் இறங்கியவுடன் அவருடைய உடமைகளையும் அந்தப் பெண் வெளியே எடுத்துப் போட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது போன்ற செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும், சட்டப்படி இதற்கு அபராதமும் சிறைத்தண்டனையும் உண்டு என்றும் ரயில்வே துறை எச்சரிக்கிறது.
