அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மகுடம் சூடியது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஒரு புகைப்படம் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. உலகக்கோப்பையை ஒரு கையில் ஏந்தியபடி, மற்றொரு கையில் காபி கப்பை வைத்துக்கொண்டு அவர் ‘சிப்’ செய்யும் அந்தப் புகைப்படம், பரம எதிரியான பாகிஸ்தானை மறைமுகமாக வறுத்தெடுக்கும் விதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் அசத்திய வருண், களத்திற்கு வெளியேயும் தனது சாதுர்யத்தை நிரூபித்துள்ளார்.
முன்னதாக ஆசிய கோப்பையை இந்தியா வென்றபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி கோப்பையை வழங்காமல் இழுத்தடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அப்போதே காபி கப்புடன் போஸ் கொடுத்த வருண், தற்போது உலகக்கோப்பையை வென்ற கையோடு அதே பாணியை மீண்டும் அரங்கேற்றியுள்ளார். “எல்லாம் பிளான் பண்ணிதான் செய்தேன், தூங்கும்போதும் கப்புடனேயே இருக்க நினைத்தேன்” என அவர் நகைச்சுவையாகக் கூறியிருப்பது வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை கொண்டாட்டங்களுக்குப் பிறகு, வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடத் தயாராகி வருகிறார்.
