கேரளாவில் அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது அனீஸ் – துஹிடா தம்பதியரின் இளைய மகன் சுஹன் (6), வீட்டில் தனது அண்ணன் ரயனுடன் தொலைக்காட்சி பார்ப்பது தொடர்பாக சண்டையிட்டுள்ளான்.
இதனால் மனமுடைந்த சிறுவன் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. வேலை முடிந்து வந்த தாய் துஹிடா, மகன் மாயமானது குறித்து அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணி நேரத் தேடலுக்குப் பிறகு, வீட்டிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குளத்தில் சிறுவன் சுஹன் சடலமாக மீட்கப்பட்டான்.
மேலும் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அண்ணனுடன் ஏற்பட்ட கோபத்தில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டானா அல்லது குளத்தில் எதிர்பாராமல் தவறி விழுந்து உயிரிழந்தானா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய சண்டையில் சிறுவன் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
