சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும், உலகின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ரகசியத் தொடர்புகள் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. எப்ஸ்டீன் சிறை சென்று வந்த பிறகும், ஹார்வர்டின் பல மூத்த பேராசிரியர்கள் அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, எப்ஸ்டீன் சிறையில் இருந்து விடுதலையான அன்று, ஹார்வர்ட் உளவியல் பேராசிரியர் ஒருவருக்கு “நான் சுதந்திரமாக வீடு திரும்பிவிட்டேன்” என மின்னஞ்சல் அனுப்பியதும், அதற்கு அந்தப் பேராசிரியர் உற்சாகமாகப் பதிலளித்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது.

​முறையான பட்டப்படிப்பு கூட இல்லாத எப்ஸ்டீன், சுமார் 9.2 மில்லியன் டாலர்களை (சுமார் ₹75 கோடி) நன்கொடையாக வழங்கியதன் மூலம் ஹார்வர்டு வளாகத்திற்குள் தனக்கென ஒரு தனி அலுவலகத்தையே உருவாக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. 2010 முதல் 2018 வரை சுமார் 40 முறை அவர் பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்றுள்ளார். ஏற்கனவே 2020-ல் ஹார்வர்ட் நடத்திய விசாரணை அரைகுறையாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது லட்சக்கணக்கான புதிய ஆவணங்கள் கிடைத்துள்ளதால் இரண்டாவது கட்ட விசாரணையை ஹார்வர்ட் தொடங்கியுள்ளது. இது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.