இயற்கை எழில் கொஞ்சும் நேபாளத்தின் ஹும்லா மாவட்டத்தில் உள்ள ‘நியின்பா’ இன மக்களிடையே இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு விசித்திரமான திருமண முறை உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மகாபாரதத்தின் திரௌபதியை நினைவுபடுத்தும் வகையில், ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதரர்களும் சேர்ந்து ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்கின்றனர். கேட்பதற்கு விசித்திரமாகத் தோன்றினாலும், இந்த ‘பாஞ்சாலி’ முறைக்கு பின்னால் மிக முக்கியமான பொருளாதாரக் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் உள்ள இந்தப் பகுதியில் விவசாயம் செய்வதும், பிழைப்பதும் மிகவும் கடினம். சகோதரர்கள் ஆளுக்கொரு திருமணம் செய்து கொண்டால், குடும்பச் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு சிறு நிலங்களாக மாறிவிடும் என்பதால், சொத்துச் சிதைவைத் தடுக்கவே இந்த முறையைப் பின்பற்றுகின்றனர். 1963-லேயே இந்த முறைக்கு நேபாள அரசு தடை விதித்திருந்தாலும், வாழ்வாதாரத்திற்காக இன்றும் பல மலைக்கிராமங்களில் இந்த வழக்கம் ரகசியமாகத் தொடர்கிறது. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து சகோதரர்களும் தந்தையாகவே கருதப்படுவதால், குடும்பத்திற்குள் எவ்வித மோதல்களும் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
