தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற முக்கிய கூட்டங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று தலைமை அறிவித்து, அதற்கான கட்டண விவரங்களையும் வெளியிட்டது.

இருப்பினும், கூட்டணி குறித்த தெளிவான முடிவு இல்லாததால் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஆர்வம் குறைந்து காணப்படுகிறது.

விருப்ப மனு விநியோகம் தொடங்கி நான்கு நாட்கள் ஆகியும், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு மனு வாங்க யாரும் வராததால் கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

“யாரோடு கூட்டணி என்றே தெரியாமல் எப்படி போட்டியிட முடியும்?” என நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ள சூழல், கட்சித் தலைமையைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.