பிரபல நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பிறகு விஜய்யின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு இருக்கும் பெரும் ரசிகர் பலம் தேர்தலில் 10 முதல் 15 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிய கூட்டணிக் கதைகள் கசிந்து வருகின்றன.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் கூட்டணிகளுக்கு மத்தியில் வலுவான ஒரு கூட்டணியை அமைக்க விஜய் திட்டமிட்டு வருகிறார். காங்கிரஸ் அல்லது தேமுதிக போன்ற கட்சிகள் தவெக பக்கம் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சசிகலாவின் சகோதரர் வி.கே. திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழகம் (அதிக), தவெக-வுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக மற்றும் அதிக ஆகிய இரண்டுமே இதுவரை ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத கட்சிகள் என்றாலும், இந்த கூட்டணி அரசியல் களத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வி.கே. திவாகரனுக்கு இருக்கும் செல்வாக்கு விஜய்க்குப் பெரிய பலமாக அமையக்கூடும். டிடிவி தினகரன் வருகையால் பலம் பெறுவோம் என நினைத்த அதிமுக-விற்கு, திவாகரனின் இந்த நகர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அரசியல் அனுபவம் மிக்க சசிகலா பின்னணியில் இருந்து இந்த கூட்டணிக்கு உதவக்கூடும் என்றும் பேசப்படுகிறது. விஜய்யின் அரசியல் பயணத்தில் இந்த புதிய கூட்டணி எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
