2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே கூட்டணிக் கணக்குகளால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியான திமுக-வின் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பல்வேறு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ‘பெருந்தலைவர் மக்கள் கட்சி’யைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக தரப்பு தீவிர முயற்சி எடுத்து வந்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தச் சந்திப்பு குறித்துப் பேசியுள்ள அரசியல் விமர்சகர்கள், “நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்குக் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அவர்களைத் தன் பக்கம் இழுத்ததன் மூலம், எடப்பாடியார் தென்மாவட்டங்களில் திமுக-வுக்கு ஒரு பெரிய நெருக்கடியைக் கொடுத்துள்ளார்” என்கின்றனர். திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் மேலும் சில கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர அதிமுக ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்த ‘வைல்டு கார்டு’ என்ட்ரியால் 2026 தேர்தல் களம் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது. இபிஎஸ்-ஸின் இந்த அதிரடி மூவ், அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.