தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாகத் தமிழக அரசை நோக்கி முன்வைத்துள்ள விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

“வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் கடும் கோபத்திலும் கொந்தளிப்பிலும் இருக்கிறார்கள்” என்று எச்சரித்துள்ள அவர், அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங் (வெளிமுகமை), ஒப்பந்த முறை மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தும் தற்போதைய போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த நடைமுறைகள் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும், அரசு தனது கொள்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்புவதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தோழமைக் கட்சியாக இருந்தாலும், இளைஞர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் சமரசம் இன்றி பாலகிருஷ்ணன் பேசியிருப்பது அறிவாலய வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. அரசின் திட்டங்கள் இளைஞர்களுக்கு உண்மையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.