தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தங்குவதற்காக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூவத்தூர் பாணியில் ஒரு முழுமையான சொகுசு விடுதியைத் தேடும் பணியில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தவும், பாதுகாப்பான முறையில் தங்க வைக்கவும் சென்னைக்கு அருகில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) பகுதிகளில் தகுந்த விடுதிகளைத் தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் சொகுசு விடுதியைத் தங்களது கட்சியின் பயன்பாட்டிற்காக முழுமையாக வாடகைக்கு எடுக்க தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 4-ஆம் தேதி முதல் அந்த விடுதி முழுவதையும் தங்களுக்கு ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விடுதி நிர்வாகம் முழு விடுதியையும் கட்சி பயன்பாட்டிற்கு வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. முன்கூட்டியே பிற நபர்கள் அறைகளை முன்பதிவு செய்துள்ளதால், மொத்த விடுதியையும் ஒதுக்க இயலாது என அவர்கள் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னை புறநகர் மற்றும் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பிற விடுதிகளில் தவெக நிர்வாகிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளை ஒரே இடத்தில் தங்க வைத்து வியூகம் வகுக்கவே இந்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குதிரை பேர அரசியலை தடுக்க ஜெயித்த பிறகு நிர்வாகிகளை பிற கட்சிகள் விலைக்கு வாங்காமல் இருப்பதற்காகவும் தற்போது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு விடுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆலோசனைகள் நடத்தி வருவதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள் அனைவரையும் விடுதிகள் தங்க வைத்து யாரையும் சந்திக்க விடாமல் செய்வதற்காகவும் விஜய் இதுபோன்று செய்வதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் பனையூர் வந்துவிட வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
