டெல்லியில் புகழ்பெற்ற ‘சுப்ரா ரஞ்சன் ஐஏஎஸ் அகாடமி’ நடத்தி வரும் சுப்ரா ரஞ்சன் என்ற ஆசிரியையை, போபாலில் கடத்தி வைத்து ரூ.1.89 கோடி பிணைத்தொகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ராவின் முன்னாள் மாணவரான பிரியங்க் சர்மா என்பவர், போபாலில் புதிய கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கலாம் என்று ஆசை காட்டி அவரை அங்கு வரவழைத்துள்ளார். அவர் போபால் வந்ததும், ஒரு வாடகை அறைக்குக் கடத்திச் செல்லப்பட்டு, துப்பாக்கி முனையில் இரண்டு நாட்கள் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து ஆசிரியையை மிரட்டி ஆன்லைன் மூலமாக ரூ.1.89 கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்ற வைத்துள்ளனர். இந்தக் கடத்தல் குறித்து தகவல் அறிந்த போபால் குற்றப்பிரிவு போலீசார், அதிரடியாகச் செயல்பட்டு மாஸ்டர்மைண்ட் பிரியங்க் சர்மா உட்பட 6 பேரை கைது செய்தனர்.
குற்றவாளிகள் பணத்தை மாற்றிய வங்கி கணக்குகளை போலீசார் உடனடியாக முடக்கியதால், அந்த முழுத் தொகையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பிடிபடாமல் இருக்க பிரியங்க் சர்மா எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளி போல நாடகமாடி ஐசியூ-வில் சேர முயன்றார், ஆனால் போலீசார் அவரை அங்கேயே வைத்து தூக்கினர்.
தனது ஆசிரியையின் பொருளாதார நிலை தெரிந்தே, ஒரு முன்னாள் மாணவர் இத்தகைய துரோகத்தைச் செய்திருப்பது கல்வி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
