அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்காலிகப் பின்னடைவே என்றும், இதைக் கண்டு துவளாமல் தொண்டர்களின் பலத்துடன் அதிமுக மீண்டும் அசுர வேகத்தில் மீண்டெழுந்து ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி சபதம் ஏற்ற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 2 பக்க விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் திமுகவிற்கு எதிராகத் தொடங்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் இரும்புக் கோட்டையாக மாற்றப்பட்ட இயக்கம் அதிமுக. கடந்த 31 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றிய பெருமை இந்த இயக்கத்திற்கு உண்டு.

“காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, கம்பீரமான அதிமுக என்னும் ஆலமரத்தின் நுனிக் கிளையில் அமர்ந்துகொண்டு, அடி மரத்தையே வெட்டிச் சாய்க்கச் சிலர் பார்க்கிறார்கள். அவ்வாறு செய்பவர்கள் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்களே தவிர, இந்த ஆலமரத்திற்கு எந்தத் தீங்கும் வராது.

தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். எம்.ஜி.ஆரும், அம்மாவும் கூட இதுபோன்ற பின்னடைவுகளைச் சந்தித்து, பின்னர் மீண்டு வந்தவர்கள்தான். அதிகாரம் இருந்தால் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் என்ற சுயநலப் போக்கு அதிமுகவின் கோடான கோடி தொண்டர்களிடம் என்றும் இருந்ததில்லை.

இந்தத் தேர்தலில் அதிமுக வெல்லவில்லை என்பது உண்மையாக இருந்தாலும், நாம் முழுமையாக வாய்ப்பை இழந்துவிடவில்லை என்பதைத் தொண்டர்கள் உணர வேண்டும்.மக்களின் விருப்பத்தையும், நமக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவையும் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், இந்தத் தோல்வியைக் கண்டு நாம் கொஞ்சமும் துவளவில்லை. ஏனெனில், இது நிரந்தரமல்ல. உண்மையைக் கூற வேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் மக்கள் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் முழு ஆதரவையோ, பெரும்பான்மையையோ வழங்கவில்லை.
அதிமுகவின் முதுகில் குத்தியுள்ள துரோகிகளைப் பற்றி எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.

தங்களைத் ‘தூய சக்தி’ என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பொய்யான குதிரை அரசு, தன்னைத் தற்காத்துக் கொள்ள திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்துள்ளது.
அந்தத் தூய சக்தி இப்போது ‘துஷ்ட சக்தியாக’ மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அதிமுகவின் முதுகில் குத்தியுள்ளது.

பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பல்வேறு கற்பனைச் செய்திகள் வலம் வருகின்றன. குறிப்பாக, திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அதிமுகவின் தனித்துவமே, வாரிசு அரசியல் இல்லாததுதான். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் இன்று தொண்டர்களால் பொதுச்செயலாளராக உள்ளேன். நாளை தகுதியுள்ள வேறொரு தொண்டர் இந்த இயக்கத்தை வழிநடத்துவார்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அதனை வெற்றியாக்கி, மீண்டும் தமிழகத்தில் ‘அம்மாவின் பொற்கால ஆட்சியை’ அமைப்பதே நமது இலக்கு. எனவே, தொண்டர்கள் வதந்திகளை நம்பாமல், மக்கள் பணிகளில் தொய்வின்றி ஈடுபட வேண்டும் எனத் தன் அறிக்கையில் எடப்பாடி கே. பழனிசாமி உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.