மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு  சோதனைச் சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று காலை, நாட்டுக்காகப் போராடிய தியாகிகளுக்குக் கௌரவம் அளிக்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் வரிசையாக நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரிக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த சக அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கடுமையான மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி காரணமாகவே அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை நெகிழச் செய்துள்ளது.

மேலும் நாட்டிற்காகத் தனது கடைசி மூச்சு வரை சேவையாற்றிய மோகன் ஜாதவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கடமைப் பாதையிலேயே உயிர்நீத்த அந்த அதிகாரியின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.