உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து ‘லான்செட்’ (Lancet) ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை, மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. நவீன மனித வாழ்க்கையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருந்தாலும், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடிப்பதாக அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் நுண் துகள்கள் (Microplastics), மனித உடலில் ஆஸ்துமா, புற்றுநோய், மாரடைப்பு மற்றும் நீரிழிவு போன்ற தீவிர நோய்களை உண்டாக்குகின்றன. குறிப்பாக, கருப்பையில் உள்ள சிசு முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் இது பாதிக்கிறது. ஹார்மோன் சமநிலையின்மைக்கு முக்கிய காரணமாக விளங்கும் பிளாஸ்டிக் மாசுபாடு, உலகளவில் ஆண்டுக்கு 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதனால் சுமார் 8,000 மெகா டன் பிளாஸ்டிக் கழிவுகள் பூமியின் நிலப்பரப்பையும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துள்ளன. இது காலப்போக்கில் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதலுக்கு (Global Warming) முக்கிய காரணியாக மாறுகிறது.
மேலும் முறையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் இரு மடங்காக உயரும் என லான்செட் எச்சரித்துள்ளது. “பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் உலக நாடுகள் உடனடியாகச் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
