உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், டேட்டிங் செயலிகள் மூலமாக ஆண்களுடன் பழகி கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டேட்டிங் செயலிகளில் ஆண்களிடம் நெருக்கமாகப் பேசி வலைவிரிக்கும் இவர், பின்னர் அவர்களது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மிரட்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு பல்வேறு ஆண்களை மிரட்டி சுமார் ரூ.6 கோடி வரை பணம் பறித்துள்ளதாகக் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்லவி சிங்கின் மிரட்டலுக்குப் பணிய மறுத்த நபர்கள் மீது, அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பொய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். இவ்வாறு இவரின் பொய் வழக்குகளால் 5 அப்பாவி நபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வேறு வழியின்றி அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடிய பின்னரே, இந்த மாபெரும் மோசடி கும்பலின் பின்னணி வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் மனுக்களை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உடனடியாகச் தலையிட்டு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, காவல்துறையினர் பல்லவி சிங் ராஜ்புத் மற்றும் அவருக்கு உதவியாகச் செயல்பட்ட கூட்டாளிகள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
தற்போது காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகப் பல்லவி சிங் மற்றும் அவருக்கு உதவிய நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தனிப்படை அமைத்துக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். டேட்டிங் செயலிகள் மூலம் நடைபெற்ற இந்த மாபெரும் பணப்பறிப்புச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
