ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் சுமார் 2.9 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்தர ‘கிராபிக்ஸ் கார்டு’ ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, அதற்குப் பதிலாக ஒரு கிலோ டிடர்ஜெண்ட் பவுடர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ‘கேட்டதொன்னு கிடைச்சதொன்னு’ என்கிற கதையாக, விலையுயர்ந்த மின்னணு சாதனத்தை எதிர்பார்த்து காத்திருந்த அந்த நபருக்கு, பார்சலை பிரித்தபோது உள்ளே துணி துவைக்கும் பவுடர் பாக்கெட் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
இந்த மோசடி குறித்த வீடியோ ஆதாரங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையான புகார் அளித்தும், அமேசான் தரப்பில் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த நபர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறிப்பாக, அனுப்பப்பட்ட பார்சலின் எடையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டியும், நிறுவனம் தரப்பில் முறையான பதில் அளிக்காமல் வாடிக்கையாளரின் புகாரை அலட்சியப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களிலேயே இத்தகைய பாதுகாப்பு குறைபாடுகளும், பொறுப்பற்ற பதில்களும் வருவது ஆன்லைன் வாடிக்கையாளர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
