ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ‘புல் தோடா’ பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் புகைப்படங்களுடன் பாகிஸ்தான் தேசியக் கொடியும் இடம்பெற்றுள்ளது.
‘ஜம்மு காஷ்மீர் யூத் மூவ்மென்ட்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டும், ஈரான் – அமெரிக்கா இடையேயான பதற்றத்தைக் குறைக்க பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டியும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ஜியோ-டேக்கிங் அடிப்படையில் அந்தப் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது, நேரடி ஆதாரமாக எந்தப் போஸ்டர்களும் அங்கு சிக்கவில்லை.
இதனால், இந்த வீடியோ உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைதியைக் குலைக்கும் நோக்கில் யாராவது இத்தகைய செயலில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, முதற்கட்ட விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
