தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி சென்னை புழல் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்நிலையத்திற்குள் நுழைந்த முதலமைச்சர், அங்கிருந்த பொதுமக்களுக்கான பார்வையாளர் இருக்கையிலேயே (Visitor Chair) எளிமையாக அமர்ந்து, காவல்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

​காவல்நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வழக்குப் பதிவேடுகள், நிலுவையில் உள்ள புகார்கள் மற்றும் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், காவல்நிலையத்திற்குத் தங்களின் குறைகளைத் தெரிவிக்க வரும் பொதுமக்களிடம் இன்முகத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் புகார்கள் மீது எவ்வித தாமதமுமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்குக் கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

​பொதுமக்களும், மனுதாரர்களும் அமரும் சாதாரண பார்வையாளர் இருக்கையிலேயே முதலமைச்சர் அமர்ந்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கிய சம்பவம் அங்கிருந்த காவலர்களிடையே நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. முதல்வர் விஜய்யின் இந்த திடீர் கள ஆய்வும், அவரது எளிமையான அணுகுமுறையும் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.