கடமை உணர்வுக்கு முன் தனது உயிரையும் பொருட்படுத்தாத ஒரு காவலரின் தீரம் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் நெகிழ வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையத்தில் ஆகாஷ் சிங் (29) என்ற ஜிஆர்பி காவலர் பணியில் இருந்தார். அப்போது சுனில் குமார் என்ற நபர், ஒரு பயணியின் பணத்தைத் திருடியதாகக் பிடிபட்டார்.
அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்தத் திருடன் திடீரென தப்பித்து ஓடி, அங்கிருந்து புறப்பட்ட திப்ருகர் – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றான். திருடனைத் தப்பவிடக் கூடாது என்ற வேகத்தில் காவலர் ஆகாஷ் சிங் அவனை விரட்டிச் சென்றார். ஓடும் ரயிலில் ஏற முயன்ற திருடனைப் பின்னாலிருந்து பிடித்து அவர் இழுத்தபோது, எதிர்பாராத விதமாக கால் தடுமாறி ரயில் மற்றும் பிளாட்பாரத்திற்கு இடைப்பட்ட இடைவெளியில் விழுந்தார்.
இதில் ரயிலில் சிக்கி அவரது இரண்டு கால்களும் துண்டாகிப் போயின. அவ்வளவு பெரிய விபத்து நடந்தும், ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையிலும் அந்தத் திருடனை அவர் விடாமல் பிடித்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து திருடனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
படுகாயமடைந்த ஆகாஷ் சிங் தற்போது லக்னோவில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கால்கள் மிக மோசமாகச் சிதைந்துள்ளதால் அவற்றை மீண்டும் பொருத்துவது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது கால்களே போனாலும் திருடனைத் தப்பவிடாத அந்தக் காவலரின் வீரத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
