இந்தியாவின் பிரீமியம் ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு குழுவைச் சேர்ந்த பெண்கள் ரயிலின் இடைவழியில் (Aisle) நின்று கொண்டு சத்தமாகப் பாட்டுப் பாடி, குத்தாட்டம் போடுகிறார்கள்.

இதனால் அந்த வழியாக கழிவறைக்குச் செல்ல வேண்டியவர்கள் மற்றும் முதியவர்கள் நகர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த வீடியோவைப் பகிர்ந்த பயணி ஒருவர், “இது ஒரு 2 மணி நேர சித்திரவதை” என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

“நமது ரயில்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக மாறி வருகின்றன, ஆனால் பொது இடத்தைப் பயன்படுத்தும் மக்களின் ‘சென்ஸ்’ இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறது” என இணையவாசிகள் பலரும் விளாசி வருகின்றனர்.

“சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யலாமா?” என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப, “சும்மா ஜாலியாகத்தானே ஆடுகிறார்கள்” என மற்றொரு தரப்பினர் இதற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களில் இது போன்ற ‘அட்ராசிட்டி’களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.