முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி (81), உடல்நலக் குறைவு காரணமாக புணேயில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு மற்றும் நோய் பாதிப்பால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும், ரயில்வே துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்த கல்மாடி, புணே தொகுதியிலிருந்து பலமுறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.