விவசாய குடும்பங்களுக்கான முக்கிய நலத் திட்டமாக மத்திய அரசு 2019ம் ஆண்டு தொடங்கிய பிஎம் கிசான் நிதி யோஜனையின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள தகுதியுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை, ஆண்டுக்கு மூன்று தவணைகளாக – தலா நான்கு மாதங்களுக்கு ரூ.2,000 என நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இதுவரை 19 தவணைகளாக 3.69 லட்சம் கோடி ரூபாய் நேரடி வங்கி பரிமாற்றம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டத்தின் 20வது தவணை தொகை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி 20வது தவணையாக 9.70 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தவுள்ளார்.
இச்செய்தி விவசாயிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக பிஎம் கிசான் தவணை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு இது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
