தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு ஒரு காலத்தில் காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் தலைவர்களின் ஆட்சியில் ‘சூப்பர் ஸ்டார்’ மாநிலமாகத் திகழ்ந்ததாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அந்தத் தலைவர்கள் போட்ட அடித்தளமே தமிழகத்தின் வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறிய அவர், அன்றைய காலத்து அரசியலையும் இன்றைய சூழலையும் ஒப்பிட்டுப் பேசினார்.
ஆனால், இன்றைய தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக விஜய் சாடினார். தற்போதைய திமுக ஆட்சியில் தமிழ்நாடு ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ மாநிலமாக இல்லாமல், ஒரு ‘ஸ்டேண்டப் காமெடி’ செய்பவர் நடத்தும் மாநிலமாக மாறிவிட்டதாக முதல்வர் ஸ்டாலினை நேரடியாக வம்புக்கு இழுத்தார். நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் வெற்றுப் பேச்சுகளை மட்டுமே மையமாக வைத்து இந்த ஆட்சி நடப்பதாகக் குற்றம் சாட்டிய விஜய்யின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
