தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்று 31 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், “மாற்றம்” என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் தவெகவின் முகமூடி கிழிந்துவிட்டதாக திமுக ஐடி விங் (DMK IT Wing) மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
இந்த ஒரு மாத கால ஆட்சியில் தமிழ்நாடு கண்டது என்ன என்ற கேள்வியோடு அறிக்கை வெளியிட்டுள்ள திமுக, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சந்தி சிரிப்பதாகவும், 35-க்கும் மேற்பட்ட படுகொலைகளும், அதில் 4 இரட்டை கொலைகளும் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், பெண்களுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட கொடூர குற்றங்கள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திமுக, மேடையில் சிங்கப்பெண் படை என்று வெற்று பில்டப் கொடுக்கும் தவெகவின் நிர்வாகி ஒருவர் சென்னையில் சிறுமியை சிதைத்த போக்சோ வழக்கிலும், தூத்துக்குடியில் தவெக இளைஞரணி நிர்வாகிகள் பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
இருண்ட தமிழகம், விண்ணைத் தொடும் விலைவாசி, தவெக தொண்டர்களின் அதிகார மமதை மற்றும் எதற்கெடுத்தாலும் மற்றவர்களைக் கைக்காட்டும் கோழைத்தனமான தலைமை என விஜய்யின் மாற்று அரசியல் பரிசு இதுதானா என்று திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது இந்த ஒரு மாத கால தவெக ஆட்சியில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
