தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, பெஞ்சமினுடன் சேர்ந்து அதிமுகவைச் சேர்ந்த குழந்தைவேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருந்த பெஞ்சமின், திடீரென தனது ஆதரவாளர்களுடன் திமுக பக்கம் தாவியிருப்பது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் இருந்து முக்கிய விக்கெட்டுகள் சரிந்து திமுகவில் ஐக்கியமாவது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.