தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில், “வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களது தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு, இங்கிருந்து தனது சட்டமன்றப் பயணத்தைத் தொடங்க வேண்டும்” என எழுச்சியுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

த.வெ.க.வினர் இத்தகைய கோரிக்கையை முன்வைத்தாலும், பெரம்பூர் தொகுதியின் தேர்தல் வரலாறு அக்கட்சிக்குச் சவாலானதாகவே பார்க்கப்படுகிறது. 1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொகுதியில் நடைபெற்ற 14 தேர்தல்களில், 10 முறை திமுக-வே வெற்றி பெற்றுள்ளது. 1991, 2001, 2011 மற்றும் 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் மட்டுமே மாற்றுக்கட்சிகள் இங்கு வென்றுள்ளன.

தற்போது திமுக-வைச் சேர்ந்த ஆர்.டி.சேகர் இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார். கடந்த 2021 தேர்தலில் 52.93% வாக்குகளைப் பெற்று அவர் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. திமுக-வின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழும் பெரம்பூரில் விஜய் போட்டியிட்டால், அது ஒரு மிகப்பெரிய அரசியல் களமாக மாறும். பல தசாப்தங்களாக திமுக வசம் இருக்கும் இந்தத் தொகுதியை புதிய கட்சியான த.வெ.க. கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இருப்பினும், இளைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவை நம்பி த.வெ.க.வினர் இக்கோரிக்கையை வைத்துள்ளனர்.

மேலும் திமுக-வின் கோட்டையில் விஜய் களமிறங்குவாரா அல்லது பாதுகாப்பான வேறு தொகுதியைத் தேர்ந்தெடுப்பாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.