உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஷேர்கர் பகுதியில், தனக்கு திருமண மறுப்பு தெரிவித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஒரு தலைக் காதலன் கொடூரமான முறையில் அமில வீச்சு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, அவனது திருமண முன்மொழிவை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த உமேஷ் காஷ்யப் என்ற திருமணமான நபர், நள்ளிரவில் வீட்டின் கூரை வழியாக உள்ளே நுழைந்துள்ளார்.
மேலும் அங்கு கோடை வெப்பம் காரணமாக கொசுவலை அமைத்து தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண், அவரது கணவர் ஹரி பிரசாத் மற்றும் அவர்களது இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரு சிறு குழந்தைகள் மீது கொடூரமான முறையில் ஆசிட் ஊற்றிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த பயங்கர தாக்குதலில் அலறித்துடித்த குடும்பத்தினரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, உடனடியாக உள்ளூர் சமூக சுகாதார மையத்தில் அனுமதித்தனர். அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்ததால், அவர்கள் பரேலி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அமில வீச்சில் கணவன், மனைவி மற்றும் இரு பிஞ்சு குழந்தைகளும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர குற்றத்தைச் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள குற்றவாளி உமேஷ் காஷ்யப்பை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறது.
