ஜார்கண்ட் மாநிலத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவரான இர்ஃபான் அன்சாரியின் மகன் கிரிஷ் அன்சாரி ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (RIMS) ஆய்வுக்காக சென்றதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், 19 வயதான கிரிஷ், ஒரு வார்டுக்குள் சென்று நோயாளிகளை நேரில் பார்த்து, அவர்கள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்கிறார்களா என கேட்பது இடம்பெறுகிறது. அவருடன் இருந்த அவரது நண்பர்கள் மற்றும் உதவியாளர்களும் இதேபோல் நோயாளிகளுஞன் பேசியபடி காணப்படுகிறார்கள். வீடியோ பின்னணியில் பஞ்சாபி பாடல் ஒலிக்கிறது. இதை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்து, “ஜார்கண்ட் மாநிலத்தின் Reel மந்திரியின் மகனும் ரீல் எடுக்கத் தொடங்கியிருக்கிறார்” என கிண்டலுடன் எக்ஸில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் இர்ஃபான் அன்சாரி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். “என் மகன் விழாவிற்காக வீட்டுக்கு வந்திருக்கிறார். அவனுடைய ஆசிரியரின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தான். மருந்துகள் வாங்கிக் கொடுத்தான். இது ஒரு நல்ல செயல். மருத்துமனை நிர்வாகத்திடம் அவன் சண்டை போடவில்லை, அல்லது அதிகாரிகளின் இருக்கையில் உட்காரவில்லை. இது ஒரு மனிதநேய செயல். இதை பாராட்டவேண்டும்,” என்றார்.

மேலும், “என் மகன் விவசாயியை கார் மூலம் மோதிக்கொலை செய்ததில்லை. கீழ் சமூகத்தை சேர்ந்த ஒருவரின் மீது சிறுநீர் கழித்ததில்லை. அவருக்கு கொஞ்சம் மனிதநேயம் இருக்கிறது. என்னை விமர்சிக்கலாம், என் மகனையோ, என் குடும்பத்தையோ இதில் உள்ளே இழுக்க வேண்டாம். என் மகன், என் ஊழியர் எனில் யார் இருந்தாலும், அவர்கள் மனிதாபிமானம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். மக்கள் சிகிச்சை பெறும் வகையில் அவர்கள் துணைநிற்கின்றனர்,” என அமைச்சர் உணர்ச்சி உடைய குரலில் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் கூறியதுபோல் இது உண்மையில் ஒரு மனிதநேய செயல் என பார்க்கப்பட வேண்டுமா, அல்லது அதிகாரத்தின் பேரில் ஒரு தவறான செயல் என ஆழமாக விசாரிக்க வேண்டிய விஷயமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதேவேளை, அரசியல் கட்சிகள் குடும்பங்களை இழுத்துச் செல்வதை தவிர்த்து, நேரடியாக கொள்கைகள் அடிப்படையில் விவாதிக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.