அகமதாபாத் மாவட்டம் பகோதிரா பகுதியில் வசித்து வந்த விபுல் வகேலா (வயது 32) என்பவர் தனது மனைவி சோனல் வகேலா (26) மற்றும் மூன்று குழந்தைகள் கரீனா (11), மயூர் (8), பிரின்சி (5) ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்த விபுல், கடன் சுமையால் வருமானம் இல்லாத நிலையில் பெரும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

உறவினர்கள் கூறுகையில், விபுல் வகேலா ஒரு ஆட்டோவை கடனுக்கு வாங்கியிருந்தார். ஆனால் EMI தவணைகளைச் செலுத்த முடியாத நிலைக்கு சென்றதாகவும், வேலை இல்லாமல் வாழ்வு சிரமமாக மாறியதால் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். பணவீக்கம் காரணமாக கடன் கொடுப்பதில் முற்றிலும் சிக்கலாகி விட்டன என்ற நிலையில், குடும்பத்துடன் விஷம் குடித்து இந்த கடும் முடிவை எடுத்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது.

இன்று காலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.