மதுரையில் நடைபெற்ற இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக-வுடனான கூட்டணி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்றும், திமுக மீது தங்களுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் முரணும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் இணைந்தே பயணிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதைக் கண்டித்து திமுக அறிவித்துள்ள போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து அகில இந்தியத் தலைமைதான் முடிவு செய்யும் என்பதால், மாவட்டத் தலைவர்களோ அல்லது நிர்வாகிகளோ இது குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால் நிர்வாகிகள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை, ஆனால் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறும் நிலையில், பாஜக தலைவர்கள் மோடி தலைமையில் தான் ஆட்சி என்று கூறி வருவதை அவர் விமர்சித்தார். “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பாஜகவினரால் இப்படிப் பேச முடியுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அமித்ஷா மற்றும் மோடியின் கருத்துகளால் அதிமுக-பாஜக கூட்டணிக்குள் குழப்பம் நிலவுவதையும் அவர் தனது பேட்டியில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.