மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் கூட்டணி குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே இருப்பதாகவும், மாநிலத் தலைவரான தாரோ அல்லது கட்சி நிர்வாகிகளோ இது குறித்து தன்னிச்சையாகப் பேசக்கூடாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
தடையை மீறி கூட்டணி குறித்து முன்னுக்குப் பின்னாகப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரிய இதயம் படைத்தவர் என்றும், கூட்டணி கட்சிகளை அவர் மிகவும் கண்ணியமாக அரவணைத்துச் செல்வதாகவும் செல்வப்பெருந்தகை புகழாரம் சூட்டினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் 100 சதவீதம் நீடிக்கும் என்று உறுதிபடத் தெரிவித்த அவர், இந்தக் கூட்டணியைப் பிரிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றார்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திமுக தலைமையிலான கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடர்ந்து பயணிக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதிமுக மற்றும் பாமக போன்ற கட்சிகளை பாஜக சிதைக்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தற்போது அதிமுக ஒரு கிளைக் கழகத்தைப் போல பாஜகவிடம் அடங்கிப் போயிருப்பதாக விமர்சித்தார்.
தமிழகத்திற்குத் தேவையான நிதி மற்றும் உரிமைகளை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருவதாகவும், ராகுல் காந்தியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பிரதமர் அஞ்சுகிறார் என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் பூத் கமிட்டி அமைக்கக் கூட ஆட்கள் இல்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் உறுப்பினர்களை நியமித்து வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
