பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கீர் பகுதியில், திருமண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் சுமார் 100 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபரும் தானும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாகவும், அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

​சம்பவத்தன்று இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்ப முயன்றபோது, அந்தப் பெண் வாகனத்தைப் பிடித்துக்கொண்டு த தடுக்க முயன்றுள்ளார். ஆனால், வாகனத்தை நிறுத்தாத அந்த நபர், வேகத்தை அதிகரித்து அந்தப் பெண்ணை சாலையில் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விவகாரம் முழுவதையும் அங்கிருந்த பொதுமக்கள் காணொலியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

​குற்றம் சாட்டப்பட்ட நபர் நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் அரசு அலுவலகத்தில் நில அளவையராகப் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. வாகனம் கவிழ்ந்ததும், அங்கிருந்த உள்ளூர் பொதுமக்கள் அவரை விரட்டிப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துள்ளனர். அந்த காணொலியில், அந்த நபர் “இவள் என் மனைவிதான், இது எங்கள் தனிப்பட்ட விஷயம்” என்று கத்துவதைக் கேட்க முடிகிறது. ஆனால், காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் காதலித்து வந்தது மட்டுமே உறுதியாகியுள்ளது.

​திருமணம் செய்ய மறுத்ததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம் என்று ராஜ்கீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் நவாடா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.