அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் கொந்தளிப்பான கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுவனை, தன் உயிரைப் பொருட்படுத்தாமல் கடலில் குதித்து மீட்ட 16 வயது இளம் காவலாளியின் சாகசச் செயல் இணையத்தில் அனைவரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இந்த அதிரடி மீட்புக் காட்சிகளின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கலிபோர்னியாவில் உள்ள சாண்டா குரூஸ் சிப்ரைட் கடற்கரையில் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம் மாறிக் கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக எழும்பியுள்ளன. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், ராட்சத அலையின் வேகத்திற்கு பிடிக்க முடியாமல் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டான். கரையோரம் நின்றுகொண்டிருந்தவர்களின் இதயத்துடிப்பை நிறுத்தும் வகையில் சிறுவன் தத்தளிப்பதைக் கண்ட அங்கிருந்த 16 வயதுடைய இளம் காவலாளி, ஒரு நொடி கூட யோசிக்காமல் கடலுக்குள் பாய்ந்தார்.
Give this 16-year-old lifeguard the highest civilian honor. This is truly the best of America! Well done! pic.twitter.com/Pq99xNK6WI
— Eric Trump (@EricTrump) July 27, 2026
எழுந்து வந்த ராட்சத அலைகளை எதிர்த்துப் போராடி சிறுவனைச் சென்றடைந்த அவர், அசாத்தியத் துணிச்சலுடன் அவனைக் காப்பாற்றிக் கரைக்கு அழைத்து வந்தார். மேலும், உரிய பயிற்சி இல்லாமல் நீச்சல் தெரியாத சில பொதுமக்கள் குழந்தையைக் காப்பாற்றத் தண்ணீருக்குள் இறங்க முற்பட்டபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்திய அந்த இளம் வீரரின் பக்குவம் அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்தச் சம்பவத்தை ஸ்காட் வண்டர் டூசன் என்பவர் தனது கேமராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இந்தத் துணிச்சலான செயலுக்காக அந்த இளம் காவலாளியை இணையவாசிகள் ‘உண்மையான ஹீரோ’ என்று கொண்டாடி வருகின்றனர். மேலும், அமெரிக்காவின் முக்கியப் பிரமுகரான எரிக் டிரம்ப் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அந்த இளைஞரின் அபாரமான தைரியத்திற்கு நாட்டின் உயரிய கவுரவம் வழங்கப்பட வேண்டும் என்று பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஆபத்தான சூழலிலும் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
