கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்குச் சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ முன்னிலையிலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்குத் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகவியலாளர்கள் மீதான இத்தாக்குதல் வெட்கக்கேடானது என்று தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய எம்.எல்.ஏ மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் வேடிக்கை பார்ப்பது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது என்றும், மக்கள் துயரத்தில் இருக்கும் இந்த ஆட்சியை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் தூக்கி எறிவார்கள் என்றும் அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.