தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அரசியலுக்குப் புதியவர்கள் வருவதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், தான் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பவன் என்றும், கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க மாட்டேன் என்றும் கூறினார்.
இருப்பினும், தவெக தரப்பில் இருந்து ‘டப்பா என்ஜின்’ என்ற விமர்சனத்திற்குத் தான் ஏற்கனவே பதிலடி கொடுத்துவிட்டதாகவும், நாகரிகமான அரசியலைத் தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விஜய் கட்சி நாகரிகமான அரசியலை முன்னெடுப்பதாகச் சொன்னதால் தானும் அமைதி காப்பதாகக் கூறிய அண்ணாமலை, அதே சமயம் தவெகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் தன்னை வம்புக்கு இழுத்தால் தனது பதில் மிகக் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார்.
கட்சி மாறி வந்தவர்களை வைத்துக்கொண்டு தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தால், அதைவிடச் சிறப்பாகப் பதில் சொல்லத் தனக்குத் தெரியும் என்றும் அவர் சாடினார்.
வரும் ஏப்ரல் மாதத் தேர்தலில் மக்கள் தகுந்த தீர்ப்பை வழங்குவார்கள் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காகத் தொடர்ந்து உழைப்போம் என்றும் அவர் தனது பேட்டியில் உறுதியாகத் தெரிவித்தார்.
