தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியக் கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு எனத் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக உள்ளது.
தவெக-வினர் அரசியல் தெளிவில்லாமல் இருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் அக்கட்சியைக் கடுமையாகச் சாடி வருகின்றன. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, விஜய்க்குப் பதவி ஆசை இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியது ஏற்கனவே விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கடலூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய மண்டல செயலாளர் பரசு.முருகையன், “தமிழக வெற்றிக் கழகம் ஆங்காங்கே வேரூன்றி வருகிறது, அதனை நீங்கள் களை எடுக்க வேண்டும்” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டர்கள் ஒரு கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தவெக போன்ற புதிய கட்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க அரசியல் ரீதியாக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தவெக-வை ‘களை’ என்று விசிக நிர்வாகி ஒப்பிட்டுப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
